டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு அவுஸ்திரேலியா, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகப் பகுதிகளில் மரக்கறி உற்பத்தியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த 1,600 சிறு விவசாயிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆதரவளிக்கவுள்ளது.
இது தொடர்பில் இன்று (27) வெளியிடப்பட்ட அறிக்கையில், 12 மாத காலத்தைக் கொண்ட இந்தத் திட்டத்தின் ஊடாக உள்ளூர் விதை உற்பத்தி முறைகளை மீளமைத்தல், தரமான பயிர்ச்செய்கைப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலைக்கு ஏற்ற விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் (DFAT) நிதியுதவியுடன், விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
டித்வா புயலினால் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் மரக்கறிச் செய்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டதுடன், விவசாய நிலங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் பெரும் சேதங்களைச் சந்தித்தன.
இந்தத் திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 800 பீன்ஸ் விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அவர்கள் 40 விவசாயக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அறிவுப் பகிர்வு, கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக, மத்துரட்டைப் பகுதியைச் சேர்ந்த 280 பீன்ஸ் விதை உற்பத்தி விவசாயிகளுக்கு சான்றளிக்கப்பட்ட பீன்ஸ் விதைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், தரமான விதை உற்பத்தி மற்றும் தேசிய விதைச் சான்றளிப்பு நடைமுறைகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2026 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வெளிநாட்டு விதை விநியோகஸ்தர்களைச் சார்ந்திருக்கும் நிலையை விவசாயிகளிடையே குறைத்து, உள்ளூர் விதைச் சந்தையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும்.
இதற்கிடையில், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 400 பேர் வீதம், மேலும் 800 விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைய, தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 2,500 தரமான உருளைக்கிழங்கு விதைக் கிழங்குகள் வழங்கப்படவுள்ளன.
இந்த உதவித் திட்டத்தின் முதற்கட்டம் 2026 ஆகஸ்ட் மாதம் நுவரெலியா ராகலைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 38 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். அடுத்தகட்ட விதைக் கிழங்கு விநியோகம் நவம்பர் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், பயிர்களின் விளைச்சல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உள்ளீடுகள், பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம் தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மரக்கறி உற்பத்தி முறைகளை வலுப்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.