2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் PAYE வருமான வரிக்கு மேலும் நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!
2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அதிகபட்ச தனிநபர் வருமான வரி விகிதமான 36 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும் மாதாந்த வருமான வரம்பு 500,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தற்போதைய வரி கட்டமைப்பின்படி, மாதாந்தம் 358,333 ரூபாவைத் தாண்டும் வருமானத்திற்கு 36 சதவீத அதிகபட்ச வருமான வரி விதிக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த வரம்பை 433,333 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், வருமான வரி விலக்களிக்கப்படும் மாதாந்த வருமான உச்சவரம்பு 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பொதுத்துறை ஊழியர்களைப் பாதுகாக்கும், அவர்களின் குறைகளைப் புரிந்துகொள்ளும் அரசாங்கமே தற்போது நாட்டில் ஆட்சியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பொதுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இயன்றளவு தீர்வுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"அதிக சத்தமிட்டால் இந்த அரசாங்கத்திடமிருந்து அதிக சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சிலர் நினைக்கின்றனர். இந்த அரசாங்கத்திடம் சத்தமிட்டு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் குரல் எழுப்புவதற்கு முன்பே நாங்கள் எமது பணிகளைச் செய்து முடிப்போம்" என அவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட்ட நாட்டைக் கட்டியெழுப்புவதே இலங்கையர்கள் அனைவரினதும் பொதுவான இலக்காக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.