மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 181.93 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பேலியகொடையில் அமைந்துள்ள சுங்கக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 18.193 கிலோகிராம் எடையுடைய கஞ்சா, மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான இந்தப் பொதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் குறித்த பொதிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அவற்றைப் பெற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் பொதிகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.