மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய வேலைத்திட்டம்
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை, தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்யவுள்ளனர். அத்துடன், மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகளில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்கள் நேரடியாக ஈடுபடவுள்ளனர்.
கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள், நகர்ப்புற உயர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் போதிய சுகாதார வசதிகள் கிடைக்காத பிரதேசங்களில் வசிக்கும் பெண்கள், 'சுவனாரி' (Suwanari) சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் இளஞ்சிவப்பு நிற ரிப்பன்கள், கைக்காப்புகள் மற்றும் ஆடைகளை அணிவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆண்டுதோறும் 6,000 புதிய நோயாளர்கள்
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், இந்நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 1,000 பெண்கள் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், அச்சம், வெட்கம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகப் பல பெண்கள் உரிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் நாடுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் சுமார் 50 சதவீதமானோர் மாத்திரமே தற்போது 'சுவனாரி' சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதாகவும் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, அடுத்த ஆண்டு 35 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட அனைத்துப் பெண்களையும் புற்றுநோய்ப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்காக, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் இயங்கும் மகளிர் சங்கங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு
இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பாலின உணர்வுள்ள வரவு செலவுத் திட்டமிடல் மற்றும் பராமரிப்புப் பொருளாதாரம் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
தேசிய பராமரிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை உதவிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டச் செயற்பாட்டில் பாலின உணர்வுள்ள கொள்கைகளை உள்ளடக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப வன்முறையைத் தடுப்பது, பராமரிப்புக் கொடுப்பனவுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தடைசெய்வது ஆகிய விடயங்களில் காணப்படும் சட்டக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தங்களை முன்னெடுப்பதற்காக நீதி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.