ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: மனித உரிமை மீறல்கள் குறித்து HRW எச்சரிக்கை!

arvloshan.com

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch - HRW) கடும் கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற்று, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உரிய ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான கலந்தாலோசனைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இன்று (29) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே HRW இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பல அடக்குமுறை அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அடக்குமுறைச் சட்டங்களை நீக்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அந்த உறுதிமொழிக்கு முரணானதாக அமைந்துள்ளதாகவும் HRW குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலமும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் சர்ச்சைக்குரிய அம்சங்களை மீண்டும் கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில், அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணி வாக்குறுதியளித்திருந்தது.

குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் உறுதியளித்திருந்தது.

எனினும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மோசமான அம்சங்களில் சிலவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக HRW சுட்டிக்காட்டியுள்ளது.

நீண்டகாலத் தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கும் அபாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், போதிய நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்டகாலம் ஒருவரைத் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும் என HRW எச்சரித்துள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அதிகாரிகள் தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

HRW அமைப்பின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவிக்கையில், பொலிஸாரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்க இந்தச் சட்டமூலம் வழிவகுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கட்டாயப்படுத்தப்பட்ட வாக்குமூலங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சட்டமூலம் தற்போதைய வடிவில் நிறைவேற்றப்பட்டால், ஏற்கனவே இதுபோன்ற கடுமையான சட்டங்களின் கீழ் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றக் குழுக்களுக்கான வரையறை குறித்து கேள்வி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதும், சர்வதேச சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்தச் சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், 2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வரையறைகள் சரியான தெளிவுடனும் சட்டரீதியான உறுதியுடனும் அமையவில்லை என HRW சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள், 'கடுமையான குற்றங்கள்' என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு சட்டங்களின் கீழ் வரும் பரந்துபட்ட குற்றச்செயல்களையும் இந்தச் சட்டத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவர முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, நிதி அல்லது வேறு பொருளாதார ஆதாயங்களைப் பெறும் நோக்கில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான குற்றங்களைச் செய்வதற்காக இணைந்து செயற்படும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழு, 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு' என வரையறுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ஒருவர் உறுப்பினராக உள்ளாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் குழுவின் உறுப்பினர்களுடன் நேரடியாக அல்லது இணையவழியில் சந்தித்துள்ளமை, ஆடை அணியும் முறை, சைகைகள், மொழிப் பயன்பாடு, பச்சைக்குத்தல்கள், தொடர்புகளைப் பேணுதல் மற்றும் அந்தக் குழு பயன்படுத்துவதாக அறியப்படும் இடங்களுக்கு அடிக்கடி செல்வது போன்ற காரணிகளையும் நீதிமன்றங்கள் கருத்திற்கொள்ள முடியும்.

இத்தகைய ஏற்பாடுகள், ஒருவர் உண்மையில் குற்றச்செயலில் ஈடுபட்டாரா என்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நபர்களுடனான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றவாளியாகக் கருதும் நிலையை உருவாக்கக்கூடும் என HRW எச்சரித்துள்ளது.

ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும்

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின்படி, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒருவரை இரண்டு மாத காலப்பகுதிக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இந்தக் காலப்பகுதியை நீடித்து, அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும் என HRW தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த தடுப்புக்காவல் உத்தரவை இரத்துச் செய்வதற்கான சுதந்திரமான அதிகாரம் நீதவானுக்கு வழங்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மட்டுப்படுத்தப்படுவதுடன், கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சந்தேகநபர்களுக்கு விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பிணை வழங்க முடியும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் பெறப்படும் வாக்குமூலங்கள் தொடர்பில் சர்ச்சை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பொலிஸாரிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்க முடியும் என்ற ஏற்பாடு நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய ஏற்பாடுகள் சித்திரவதைகளை ஊக்குவிப்பதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்துள்ளன.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில், வாக்குமூலங்கள் நீதவானிடம் வழங்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக HRW தெரிவித்துள்ளது.

இதனால், சந்தேகநபர்களை வாக்குமூலம் வழங்குமாறு கட்டாயப்படுத்துதல், துன்புறுத்துதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கண்காணிப்பு அதிகாரங்கள் குறித்தும் எச்சரிக்கை

இந்தச் சட்டமூலம் பொலிஸாருக்கு விரிவான கண்காணிப்பு அதிகாரங்களை வழங்குவதாகவும் HRW தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் மூலம் தொலைத்தொடர்புகளை இடைமறித்துப் பதிவு செய்தல், மின்னணு சாதனங்களிலிருந்து தடயவியல் அடிப்படையில் தரவுகளைப் பெறுதல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையவழிச் சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற அதிகாரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவின்றியும் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநர்களிடமிருந்து சில தகவல்களைப் பெறுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதனங்களின் உரிமையாளர் அல்லது சந்தாதாரர் தொடர்பான தகவல்கள், அழைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களின் ஊடாகக் கண்டறியப்படும் இருப்பிடத் தகவல்கள் போன்றவற்றை இவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்.

இத்தகைய அதிகாரங்கள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என HRW தெரிவித்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைக் குறிவைப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஊடகச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்

குற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் பெயர் அல்லது அவரை அடையாளம் காண உதவும் தகவல்களை வெளியிடுவதை குற்றமாக்கக்கூடிய ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நீதிமன்ற அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக HRW தெரிவித்துள்ளது.

மேலும், கடுமையான குற்றமொன்று இடம்பெற்றுள்ளதாக நியாயமான சந்தேகம் எழுந்தால், தனிநபர்கள் மற்றும் வாகனங்களைச் சோதனையிடுதல், கைது செய்தல், தொடர்புடைய பொருட்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் நீதிமன்ற அனுமதியின்றி சில இடங்களுக்குள் நுழைந்து சோதனையிடுதல் போன்ற பரந்த அதிகாரங்களும் பொலிஸாருக்கு வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய அதிகாரங்களுக்கு போதிய நீதித்துறை மேற்பார்வை இல்லாதிருப்பது, அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என HRW எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகையிலும் தாக்கம் ஏற்படலாம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வழங்கிய முக்கிய உறுதிமொழிகளில் ஒன்றாகும்.

இந்தச் சலுகையின் கீழ், இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன.

எனினும், முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய அம்சங்களைத் தொடர்ந்து பேணுவதாக அமைந்துள்ளதால், GSP+ திட்டத்தின் கீழான மனித உரிமைக் கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றுவது தொடர்பிலும் கேள்விகள் எழக்கூடும் என HRW தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தைத் தயாரிக்கும் நடவடிக்கையின்போது அரசாங்கம் உரிய கலந்தாலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே, சட்டமூலத்தை மீளப்பெற்று, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வெளிப்படையான கலந்தாலோசனைகளை முன்னெடுக்க வேண்டும் என HRW வலியுறுத்தியுள்ளது.

தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், நீதித்துறை மேற்பார்வை மற்றும் உரிய சட்ட நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் கடமையாக இருந்தாலும், சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு அமைவாகவே அதனை முன்னெடுக்க வேண்டும் என HRW ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சட்டமூலம் இலங்கை தனது GSP+ வர்த்தகச் சலுகையின் கீழ் கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக அமையாது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027 முதல் இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் அரசாங்க ஒப்பந்தங்கள் ஊடாக மட்டுமே!

...

arvoshan.com

மூச்சுத்திணறல் அபாயம் – கொழும்பில் 12,000 கோலி சோடா போத்தல்கள் பறிமுதல்!

...

arvoshan.com

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

...

arvoshan.com

800 படுக்கைகள் இருந்தும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத KDU மருத்துவமனை – COPE அதிருப்தி!

...

arvoshan.com

GSP+ வரிச்சலுகையைப் பாதுகாக்க சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வர்த்தக சம்மேளனம் கோரிக்கை

...

arvoshan.com

இலங்கையில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு!

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்: GSP+ சலுகையை இலங்கை இழக்க நேரிடும் – சஜித் எச்சரிக்கை

...

arvoshan.com

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

கடும் மின்னல் தாக்கம் குறித்து 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுடன் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு: நவம்பர் 2ஆம் திகதி நாடளாவிய வேலைத்திட்டம்

...

arvoshan.com

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ. 10 இலட்சம் வரை காப்புறுதி!

...

arvoshan.com

கொபேகனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – ஐந்து கிராமவாசிகள் கைது!

...

arvoshan.com

ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன், எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!

...

arvoshan.com

தங்கக் கடத்தல் வழக்கில் இலங்கையருக்கு விடுதலை - ஒரு வருட சிறைத்தண்டனைக்குப் பின்னர் தீர்ப்பு!

...