தங்கக் கடத்தல் வழக்கில் இலங்கையருக்கு விடுதலை - ஒரு வருட சிறைத்தண்டனைக்குப் பின்னர் தீர்ப்பு!
தங்கக் கடத்தல் குற்றச்சாட்டில் மாலைத்தீவு நீதிமன்றத்தால் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரை, அந்நாட்டின் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட குறித்த இலங்கையருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பை, கடந்த 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி மாலைத்தீவு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றத்தினால் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டனை விதிக்கப்பட்டு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
2,282 கிராம் தங்கப் பசை மீட்பு
கடந்த 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி, துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமானத்தில் மாலைத்தீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலையத்தின் பசுமை வழித்தடம் (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற அவரைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் காற்சட்டையின் பைகளிலும் உள்ளாடைக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,282 கிராம் தங்கப் பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலைத்தீவு சுங்கச் சட்டத்தின் 97(a) பிரிவின் கீழ், பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதன் அடிப்படையில், குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்தது.
சட்டரீதியான அடிப்படை இல்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
எனினும், கடத்தல் குற்றத்தை நிரூபிப்பதற்குத் தேவையான சட்டரீதியான அம்சங்கள் குற்றச்சாட்டில் பூர்த்தி செய்யப்படவில்லை என உயர் நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
குறித்த தங்கம் தடைசெய்யப்பட்ட பொருளாக இருக்கவில்லை என்பதையும், அதற்கு சுங்க வரி விதிக்கப்படவில்லை என்பதையும் அரச தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிவிக்கப்படாத தங்கத்தை அங்கீகரிக்கப்படாத பொருளாகக் கருத முடியும் என்ற அரச தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தில் வெளிப்படையாகக் குற்றமாக வரையறுக்கப்படாத ஒரு செயலுக்காக ஒருவரைக் குற்றவாளியாக்க முடியாது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைத் தீர்ப்பு அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், முன்னர் வழங்கப்பட்ட குற்றவாளித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இரத்துச் செய்து, குறித்த இலங்கையரை விடுதலை செய்துள்ளது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகளான மொஹமட் ஷனீஸ், ஹுசைன் மஸீத் மற்றும் ஹுவைஃபா மொஹமட் ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர்.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகும் முன்னரே, கீழ் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனையை குறித்த இலங்கையர் முழுமையாக அனுபவித்து முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.