பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை – இருவர் கைது!
பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு, வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து அச்சுறுத்தி பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (21) சீதுவை, பண்டாரவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், இருவரும் பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சீதுவை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லியனகேமுல்ல, அமந்தொலுவ, தம்பதுரய மற்றும் உடம்மிட்ட ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற ஆறு கொள்ளைச் சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து, பொலிஸ் சோதனை நடத்துவதாகக் கூறி அவர்களை அச்சுறுத்திய பின்னர், அவர்களிடமிருந்த பணம் மற்றும் உடைமைகளைக் கொள்ளையிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதிரிசூரிய பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர்கள் தேடப்பட்டு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (22) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.