மூன்று மாதங்களில் சிறைச்சாலைக் கைதிகளின் எண்ணிக்கை 5,068ஆல் குறைவு!
இலங்கையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, கைதிகளின் எண்ணிக்கை மூன்று மாதங்களில் 41,993 இலிருந்து 36,925 ஆகக் குறைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தாமதங்களைக் குறைப்பதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மாத்திரம் 1,506 அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பரிசோதனைக்காகப் பெறப்படும் பொருட்கள் தொடர்பான அறிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கப் பகுப்பாய்வாளர் வெளியிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருட்களை விரைவாக அழிக்க புதிய சட்டத் திருத்தம்
குற்றவியல் வழக்குகளில் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களைப் பாதுகாத்து வைப்பது தொடர்பிலும் புதிய சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
தற்போதைய நடைமுறையில், நீதிமன்ற விசாரணைகள் நிறைவடையும் வரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் முழுத் தொகையையும் பாதுகாத்து வைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின்படி, குறித்த போதைப்பொருட்களைப் புகைப்படம் எடுத்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் காணொளிப் பதிவு செய்தல் மூலம் ஆவணப்படுத்திய பின்னர், சம்பந்தப்பட்ட நீதவானுக்கு அறிவிக்க முடியும்.
அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறித்த போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்க முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், இந்த நடைமுறைகள் சட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், சந்தேகநபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதே முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, நியாயமான விசாரணையைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.