மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
இலங்கையில் மண்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் 30,000-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) தெரிவித்துள்ளது.
அத்துடன், மிதமான மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
டித்வா (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பல இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், டித்வா அனர்த்தத்தின்போது தளர்வடைந்த அல்லது இடம்பெயர்ந்த பாறைகள் மற்றும் மண் அடுக்குகள், தற்போதைய கனமழையால் மீண்டும் நிலையற்ற நிலையை அடைந்து சரிந்து விழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தமது சுற்றுப்புறச் சூழலைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் அல்லது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளை விடுத்துள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பெய்யும் கனமழை, வழக்கத்திற்கு மாறான சத்தங்கள், நிலத்தில் அல்லது கட்டடங்களில் ஏற்படும் வெடிப்புகள் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு கனமழையைத் தொடர்ந்து மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய வானிலை நிலவரம் தொடர்பாக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்
இதேவேளை, இலங்கைக்கு அருகில் உருவான தாழமுக்கப் பகுதி தற்போது நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளதாகவும், அது மேற்கு நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவுப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரதேசங்களில் அடுத்த நாளும் தாழமுக்கத்தின் தாக்கம் தொடரக்கூடும் என்பதுடன், மேலும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமத்திய ரேகைக்கு அருகில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு வர்த்தகக் காற்றுகள் சந்திக்கும் தாழமுக்கப் பட்டையான இடைவெப்பமண்டல சங்கம வலயத்தின் (Intertropical Convergence Zone) தாக்கமே தற்போதைய சீரற்ற வானிலைக்குக் காரணம் எனவும் அவர் விளக்கியுள்ளார். இந்த வலயம் தாழமுக்கங்கள் உள்ளிட்ட வானிலைத் தொகுதிகள் உருவாவதற்குப் பங்களிக்கக்கூடும்.
ஒக்டோபர் 27 வரை மழை நீடிக்கலாம்
மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் மற்றுமொரு தாழமுக்கத் தொகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த தாழமுக்கத் தொகுதி இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், காற்றின் நகர்வுகள் காரணமாக ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நாட்டில் மழை தொடரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்கு கடலுக்குச் செல்லும் கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக வங்காள விரிகுடா கடற்பரப்பில் பயணங்களை மேற்கொள்ளும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.