ஈஸ்டர் தாக்குதல்: உண்மையான குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர் – தண்டனை பெற்ற மூவரின் வாக்குமூலங்கள் குறித்து சிஐடி விசாரணை!
2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தண்டனை பெற்ற மூவர், உண்மையான குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வினால் குறித்த தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட மில்ஹான், ரிஸ்கான் மற்றும் ஸைனுல் அப்தீன் ஆகிய மூவரும், தாங்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்ற போதிலும், தாக்குதல்களுடன் உண்மையில் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தை நேற்று முன்தினம் (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குறித்த மூவரிடமும் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு சிஐடியின் எட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தைக் கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே உள்ளிட்ட மூவருக்கு எதிராக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் தவறாக வழிநடத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ராஜன் வழங்கிய தகவல்களை மறைக்க முயற்சி?
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னர் மந்தகதியில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போதிலும், தற்போது அவை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த வாரம் பல முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கிய மைக்கல் சேவியர் வில்வராசிங்கம் என்றழைக்கப்படும் ராஜனிடம் பெறப்பட்ட வாக்குமூலமும் அவற்றில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராஜன், சுரங்க என்ற இராணுவக் கோப்ரலுடன் தொடர்பில் இருந்ததாகவும், தீபன் என்பவரின் வீட்டில் இடம்பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களைச் சேகரிக்குமாறு இராணுவத்தினரால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தீபன் என்பவர், ஈஸ்டர் தாக்குதலில் தற்கொலைக் குண்டுதாரியாகச் செயற்பட்ட இன்ஷாப் அஹமட்டின் மாமனாரான வர்த்தகர் அலாவுதீனின் நண்பர் எனக் குறிப்பிடப்பட்டார்.
குறித்த வீட்டுக்குச் சென்றபோது, கறுப்பு புர்கா அணிந்திருந்த பெண் ஒருவரையும் மட்டக்களப்பு பிரதேசத்துக்குரிய பேச்சுவழக்கில் தமிழ் பேசிய மற்றொரு நபரையும் ராஜன் அவதானித்ததாகக் கூறப்பட்டது.
இந்தத் தகவல்களை அவர் இராணுவக் கோப்ரல் சுரங்கவிடம் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்த ராஜன், அந்த வீட்டில் தான் கண்ட பெண்ணை சாரா ஜாஸ்மின் என அடையாளம் கண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இது தொடர்பில் சுரங்கவிடம் தெரிவித்தபோது, அந்த விடயத்தைப் புறக்கணித்து அமைதியாக இருக்குமாறும் சம்பவத்தை மறந்துவிடுமாறும் ராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதை சுரேஷ் சலேயின் அறிவுடன் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குற்றஞ்சாட்டினார்.
கருணா அம்மானுக்கு போலி கடவுச்சீட்டு?
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான கருணா அம்மானுக்கு, பிரித்தானியாவுக்குச் செல்வதற்காகப் போலியான இராஜதந்திரக் கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுரேஷ் சலே மற்றும் இராணுவத்துடன் தொடர்புடைய அன்சார் என்பவர் இணைந்து குறித்த கடவுச்சீட்டை ஏற்பாடு செய்ததாக கருணா அம்மான் தெரிவித்திருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எனக் கூறப்பட்ட கொக்கில துஷ்மந்த என்ற பெயரில் அந்தக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாகவும், எனினும் அவ்வாறான நபர் ஒருவர் இருப்பதற்கான தகவல்கள் கிடைக்கவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
பின்னர் கருணா அம்மான் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுரேஷ் சலே பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குற்றஞ்சாட்டினார். இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் வாக்குமூலம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் சிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் அசாத் மௌலானாவை, கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினருக்கு டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுரேஷ் சலேயின் தரப்பு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு
சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களை வழக்குத் தொடுநர் தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு பெரும்பாலும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல கடவுச்சீட்டுகளை சலே வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் கேள்விக்குட்படுத்தினார்.
குறித்த கடவுச்சீட்டுகளின் இலக்கங்கள் மற்றும் அவை எவ்வாறு பெறப்பட்டன என்பது தொடர்பான விபரங்களை விசாரணையாளர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கருணா அம்மானுக்கான கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில் சலே பிரான்ஸில் இருந்ததாகவும், வெளிநாட்டில் இருந்துகொண்டு இலங்கையில் கடவுச்சீட்டைத் தயாரிக்க அவர் எவ்வாறு ஏற்பாடு செய்திருக்க முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடை குறித்தும் ஆராய்வு
இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் நீதவான் பசன் அமரசேன கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படாத போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி, குறித்த பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி தரப்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் நீதவான் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாலும், முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்த வழக்கொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் அவர் இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என விளக்கமளித்தார்.
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நவம்பர் மாத நடுப்பகுதி வரை இரண்டு வாரங்கள் வெளிநாடு செல்ல முன்னாள் ஜனாதிபதி அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவத் தேவைகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், மனிதாபிமான அடிப்படையில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
சிஐடி காவலில் சுரேஷ் சலே
இதற்கிடையில், சிஐடி காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேயை அண்மையில் நேரில் சந்தித்ததாக நீதவான் தெரிவித்தார்.
சிஐடி அதிகாரிகள் தன்னை நன்றாக நடத்துவதாக சலே தன்னிடம் கூறியதாகவும் நீதவான் குறிப்பிட்டார்.
சலே கோரியிருந்த சில உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளனவா என நீதவான் வினவியபோது, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிஐடி அதிகாரிகள் பதிலளித்தனர்.
சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன, தமது கட்சிக்காரரை வெலிசறை சிறைச்சாலைக்கு மாற்றுவதைவிட சிஐடி காவலில் வைத்திருப்பது சிறந்தது எனத் தெரிவித்தார்.
மேலும், சலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டபோது, மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்துகொடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
121 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுரேஷ் சலேயின் உடல்நிலை தற்போது மேம்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்ந்தும் சிஐடி காவலில் இருப்பதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, வழக்குத் தொடுநர் தரப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கியதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.