பிரான்ஸில் மாணவர் போராட்டங்கள் மீதான அடக்குமுறை: இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்
பிரான்ஸில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை அடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) கண்டனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அந்நாட்டின் பொதுக் கல்வி முறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான கடிதமொன்றை கடந்த புதன்கிழமை (21) இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கையளித்துள்ளது.
ஒக்டோபர் 19ஆம் திகதியிடப்பட்ட குறித்த கடிதத்தில், பிரான்ஸில் பொதுக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், கல்வித்துறை முறையாகக் கவனிக்கப்படாமை மற்றும் அரச அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் பிரான்ஸ் மாணவர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸில் 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ள அல்லது கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பாடசாலைக் கட்டமைப்புகளின் மோசமான நிலை மற்றும் கல்விக்கான போதிய அரச முதலீட்டின்மை போன்ற பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான மக்களின் அதிருப்தியே நாடளாவிய ரீதியில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், பிரான்ஸ் அதிகாரிகள் கலகத் தடுப்புப் பொலிஸாரை ஈடுபடுத்தியதுடன், மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடிகளைக் கொண்டு அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்ததாகவும் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
போராட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து பெரும்பாலானோர் சிறுவர்களாக உள்ள சுமார் 3,000 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், போராட்டங்களின்போது இடம்பெறும் சேதங்களுக்காகப் பெற்றோரிடம் நிதிப் பொறுப்பைக் கோருவதற்கான அச்சுறுத்தல்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் குடும்பங்களை அச்சுறுத்துவதுடன், மாணவர்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதையும் தடுக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஐந்து முக்கிய கோரிக்கைகள்
பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டங்களில் பங்கேற்றமைக்காக மாணவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட மற்றும் சிவில் நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிராகக் கலகத் தடுப்புப் பொலிஸாரை ஈடுபடுத்துவதையும், அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் எனவும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் போராட்டங்களில் ஈடுபடுவதற்குமான உரிமைகளை மதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
அத்துடன், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குப் போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், கல்வித்துறைக்கு நிலையான மற்றும் போதுமான அரச நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
புறக்கணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டடங்களை உடனடியாகப் புனரமைப்பதுடன், கடுமையான வெப்பம் உள்ளிட்ட ஆபத்தான காலநிலை நிலைமைகளின்போதும் பாதுகாப்பான வகுப்பறைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளது.
மேலும், மாணவர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், போராட்டங்கள் வெளிச்சக்திகளால் தூண்டப்படுவதாகக் கூறி அவற்றை நிராகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தெற்காசிய நாடுகளிலும் கல்வித்துறை நெருக்கடி
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள நிலைமை, பொதுக் கல்வித்துறையைப் பாதிக்கும் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டுள்ள மாணவர் ஒன்றியம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுடனும் இதனை ஒப்பிட்டுள்ளது.
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பாடசாலை மறுசீரமைப்பு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இத்தகைய மாற்றங்கள் பாடசாலைகள் மூடப்படுவதற்கும், கல்வியைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதற்கும், பின்தங்கிய சமூகங்கள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை, போதிய நிதி ஒதுக்கீடின்மை, மாணவர்கள் நிரம்பிய வகுப்பறைகள், மோசமடைந்து வரும் பாடசாலைக் கட்டமைப்புகள், பல்கலைக்கழக அனுமதியில் நிலவும் சமமற்ற வாய்ப்புகள், வேலையின்மை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியன இலங்கை மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வியை அடிப்படை மனித உரிமையாகப் பாதுகாப்பதற்கும், மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் தெற்காசியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள மாணவர் ஒன்றியங்கள், இளைஞர் அமைப்புகள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கடிதத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கையொப்பமிட்டுள்ளார். சர்வதேச மாணவர் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதிலும், இலவசமான, சமத்துவமான மற்றும் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமையைப் பாதுகாப்பதிலும் தமது அமைப்பு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.