ட்ரம்ப்புடனான சந்திப்பை நிராகரித்த பின்னணியில், இறைமையைப் பாதுகாத்து வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்துவோம் – கிம் ஜாங் உன்
வடகொரியாவின் தேசிய இறைமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாத்துக்கொண்டு, வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பதற்கு விடுத்த முயற்சிகளை வடகொரியா நிராகரித்த சில நாட்களுக்குப் பின்னர் கிம் ஜாங் உன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களிடமிருந்து நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் புதிய தூதுவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுவாக இவ்வாறான நற்சான்றிதழ்களைப் பெறும் நிகழ்வுகள் மூத்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுவது வழக்கமாகும். எனினும், இந்த முறை கிம் ஜாங் உன் நேரடியாகப் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம், அமைதி மற்றும் நட்புறவு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், தேசிய இறைமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாத்துக்கொண்டு வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்துவதும் மேம்படுத்துவதும் வடகொரியாவின் இராஜதந்திர நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் பாதுகாப்பு நெருக்கடி, அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் அதிகரித்து வருவதாகவும், தற்போதைய சர்வதேச நிலைமைகள் தேசிய இறைமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான புரிதலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியா மேலாதிக்கத்தையோ அல்லது பிராந்திய விரிவாக்கத்தையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த வாரம் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜாங் உன்னைச் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
எனினும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. சீனா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுடனான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நிறைவு செய்துகொண்டு கடந்த வியாழக்கிழமை ட்ரம்ப் ஆசியாவிலிருந்து புறப்பட்டார்.
கிம் ஜாங் உன் தூதுவர்களை வரவேற்றதுடன், ட்ரம்ப்பின் சந்திப்பு முயற்சிகளுக்கு இணங்காமல் இருப்பது வடகொரியாவின் இராஜதந்திர அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துவதாக தென்கொரியாவின் கியுங்னாம் பல்கலைக்கழகத்தின் தூர கிழக்கு ஆய்வுகள் நிறுவனப் பேராசிரியர் லிம் யூல்-சுல் தெரிவித்துள்ளார்.
பல்துருவ உலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட இறைமை சார்ந்த இராஜதந்திர அணுகுமுறையை வடகொரியா முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறியாக இது அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ட்ரம்ப் தனது முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில் கிம் ஜாங் உன்னுடன் பலமுறை உச்சிமாநாட்டுச் சந்திப்புகளை நடத்தியிருந்தார். வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதே அந்தச் சந்திப்புகளின் முக்கிய நோக்கமாக இருந்தபோதிலும், உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பல ஆண்டுகால தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
மேலும், தனது அணுவாயுத அந்தஸ்தை சட்டரீதியாக உறுதிப்படுத்தியுள்ள வடகொரியா, தனது அணுவாயுதக் களஞ்சியம் நிரந்தரமானது என்றும் அதனை மாற்ற முடியாது என்றும் அறிவித்துள்ளது.
அதேவேளை, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாகத் தனது படையினரை அனுப்பியதன் மூலம் ரஷ்யாவுடனான உறவுகளையும் வடகொரியா மேலும் வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.