சிறைச்சாலைக்கு வெளியே செல்லும்போது பௌத்த பிக்குகள் காவியுடை அணிய அனுமதி – புதிய விதிமுறைகள் முன்மொழிவு
சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள், நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட தேவைகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியே செல்லும்போது காவியுடை அணிவதற்கு அனுமதிக்கும் வகையில், சிறைச்சாலை விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (14) நீதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மூன்று பௌத்த நிகாயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்பட்டமை தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, தற்போதுள்ள சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத்து இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின்படி, சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகள் சிறைச்சாலைக்கு வெளியே செல்லும்போது காவியுடை அணிய அனுமதிக்கப்படுவர். எனினும், சம்பந்தப்பட்ட பௌத்த பீடம் அல்லது நிகாயம் வேறுவிதமாக அறிவுறுத்தும் பட்சத்தில் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சிறைச்சாலை நிலையான உத்தரவு இலக்கம் 356இல் திருத்தங்களை மேற்கொண்டு, பௌத்த பிக்கு ஒருவர் சிறையில் அடைக்கப்படும்போது அவரது காவியுடை அகற்றப்படுவது தொடர்பாக பௌத்த விவகாரத் திணைக்களத்துக்கு அறிவிக்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் பௌத்த விவகாரத் திணைக்களத்துடன் கலந்தாலோசித்தே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஏற்பாடுகள், தேவையான மாற்றங்களுடன் ஏனைய மதங்களைச் சேர்ந்த மதகுருமார்களுக்கும் பொருந்தும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளன.
குழுவின் இடைக்கால அறிக்கை, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளுக்கு அமைவாக உரிய நிலையான உத்தரவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை அனுபவிக்கும் மதகுருமார்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் மூத்த பௌத்த பிக்குகள் கவலை வெளியிட்டிருந்த நிலையில், இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலை விதிமுறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திருத்தங்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.