சவூதியில் அனோஜனின் மரண தண்டனை ரத்து: சாணக்கியன் வரவேற்பு!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியினை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் வரவேற்றுள்ளார். அத்துடன், அவர் பாதுகாப்பாக இலங்கை திரும்புவது வரை அதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் (X) பதிவொன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், இந்தச் சாதகமான திருப்பம் அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவரது விடுதலைக்காக உழைத்தவர்களுக்கும் பெரும் நிம்மதியையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ய எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான முன்னேற்றத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்" என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மனிதநேயமிக்க குடிமக்களின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேவையான சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்படும் வரை இந்த முயற்சிகள் ஓய்வுபெறாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிவடைந்து, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் சேர்க்கப்படும்போது மட்டுமே நமது பணி முழுமையடையும்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜன் கூடிய விரைவில் தாயகம் திரும்புவதற்கு வசதியாக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தொடர்ந்து இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அனோஜன் இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இணையவதே உண்மையான மகிழ்ச்சியளிக்கும் தருணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.