அமைச்சு வழங்கிய இரு வாகனங்களும் பழுது – நண்பரின் வாகனத்தைப் பயன்படுத்த நேரிட்டது: அமைச்சர் லால் காந்த
தனது அமைச்சினால் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்பட்ட இரண்டு இரட்டைச் சவாரி வாகனங்களும் பழுதடைந்ததால், நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான தனியார் வாகனத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு இரட்டைச் சவாரி வாகனங்களையும் உத்தியோகபூர்வ பயணங்களுக்காகப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் அவ்விரு வாகனங்களும் இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளானதாகத் தெரிவித்தார்.
முதலில் ஒரு வாகனம் பயணத்தின் இடைநடுவில் பழுதடைந்ததாகவும், இதையடுத்து மாற்று வாகனமாக இரண்டாவது வாகனத்தைப் பயன்படுத்தியபோது, சிறிது தூரம் சென்ற பின்னர் அதுவும் பழுதடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக, தனது உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நெருங்கிய நண்பருக்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் பொருத்தமான வாகனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், உத்தியோகபூர்வ தேவைகளுக்காகப் புதிய வாகனங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், அரசாங்கத்துக்குச் சொந்தமான பல கட்டடங்களின் பராமரிப்பு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சில உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அரச சொத்துகள் சேதமடைந்த கூரைகள், பழுதடைந்த மலசலகூடங்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும், அவற்றுக்குப் போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அரச நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளைத் தீர்க்க வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் மேலதிக சலுகைகள் அல்லது விசேட அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சர்வதேச நிலைமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லால் காந்த, உலகளாவிய மோதல்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலகின் மிகக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குவதாகவும் தெரிவித்தார்.