2027 வரவு – செலவுத் திட்டத்தில் ‘இரண்டாவது வாய்ப்பு’ கடன் திட்டம்: ஜனாதிபதியிடம் நாமல் ராஜபக்ச கோரிக்கை
கடந்த காலங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்ட போதிலும், பின்னர் முழுமையாகக் கடனைச் செலுத்தி முடித்த தொழில்முனைவோருக்கு மீண்டும் கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ‘இரண்டாவது வாய்ப்பு’ வணிகக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு, பின்னர் தமது கடன்களை முழுமையாகச் செலுத்தியவர்கள், கடன் தகவல் பணியகத்தின் (CRIB) பதிவுகள் காரணமாகப் புதிய கடன்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக நாமல் ராஜபக்ச தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்ட கடன்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் ஐந்து ஆண்டுகள் வரை CRIB பதிவுகளில் காணப்படக்கூடும் என்றும், இதனால் கடன் பெற விரும்புவோரின் வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், CRIB தனிநபர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமைப்பல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் மலேசியாவின் மத்திய கடன் தகவல் முறைமையான CCRIS-ஐ உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடன்கள் முழுமையாகச் செலுத்தப்பட்ட பின்னர் அவற்றின் நிலைமையைப் புதுப்பிப்பதுடன், பிரதானமாக முந்தைய 12 மாதங்களுக்கான கடன் மீளச்செலுத்தல் வரலாற்றைப் பிரதிபலிக்கும் நடைமுறையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை உள்ளடக்குமாறும் அவர் முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, கடன் முழுமையாகச் செலுத்தப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் CRIB பதிவுகளைப் புதுப்பித்தல், செலுத்தி முடிக்கப்பட்ட கடன்களைத் தெளிவாக ‘முழுமையாகச் செலுத்தப்பட்டது / மூடப்பட்டது’ (Fully Settled/Closed) எனக் குறிப்பிடுதல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது விண்ணப்பதாரர்களின் கடந்தகாலக் கடன் சிக்கல்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல், அவர்களின் தற்போதைய வருமானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துமாறும் கோரியுள்ளார்.
இலங்கையில் கடன் தொடர்பான வரலாற்றுத் தகவல்களைப் பதிவுகளில் வைத்திருக்கும் காலப்பகுதியை சர்வதேச நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தமது கடன் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னரும் தொழில்களை மீள ஆரம்பிக்க முடியாமல் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில், ‘இரண்டாவது வாய்ப்பு வணிகக் கடன் திட்டம்’ ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.
கடந்த காலங்களில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட ஒருவர், பின்னர் தனது கடனை முழுமையாகச் செலுத்தியிருந்தால், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கு அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் தொழில்முனைவோருக்கு மட்டுமன்றி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மையளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சினைக்கு விரைவானதும் நீண்டகாலத் தீர்வை வழங்கக்கூடியதுமான நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்