23,000 பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானோர் பட்டியல் வெளியீடு
இலங்கையின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 23,000 பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு, தரம் 1(அ) இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு குறித்த பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, கடந்த மே 24ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எழுத்துப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் இப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி, தாம் சார்ந்த மாகாணத்திற்கான இணைய இணைப்பின் ஊடாகத் தங்களது தகுதி நிலையைச் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
மேல், மத்திய, தென், வடக்கு, கிழக்கு, வடமேல், வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ ஆகிய ஒன்பது மாகாணங்களுக்குமான தனித்தனி இணைப்புகள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தங்களது பல்கலைக்கழகங்களிலிருந்து தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், அவற்றுக்கான கோரிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்கான உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுடன், நேர்முகத் தேர்வு அட்டவணைகளும் இம்மாத இறுதிக்குள் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களங்களின் இணையத்தளங்களில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.