சிறுவர்களின் இணையப் பாதுகாப்புக்கான தேசியக் கொள்கை கட்டமைப்பை உருவாக்க இலங்கை நடவடிக்கை
சிறுவர்களை இணையவழிச் சுரண்டல், இணையவழி அச்சுறுத்தல்கள், இணையத் துன்புறுத்தல் உள்ளிட்ட டிஜிட்டல் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கான தேசியக் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ஊடகப் பிரிவின் தகவலின்படி, சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலன் தொடர்பான இந்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை (02) அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதில் ஏழு முக்கிய அமைச்சுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்களின் ஊடாக உருவாக்கப்படும் கொள்கை கட்டமைப்பு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசைக் கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், 2027 ஜனவரியில் நடைபெறவுள்ள சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான பிராந்திய மாநாட்டுக்கு முன்னதாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தக் கலந்துரையாடலுக்கு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமை தாங்கியதுடன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆரம்ப உரையை நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
எனவே, அரச நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கமைய, அதிகாரமளித்தல், திட்டமிடல் நிலையிலேயே பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகாலப் பதிலளிப்பு மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டில் ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தொழில்நுட்ப அணுகலை விரிவுபடுத்துவதுடன், சிறுவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெற்காசிய நாடுகளை ஒன்றிணைத்து, சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச கொள்கைகளை உருவாக்குவதில் இலங்கை முன்னிலை வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் பிரதிநிதிகள் தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கியுள்ளனர்.
அத்துடன், சர்வதேச ஆய்வுகளின் அடிப்படையில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துகள் தொடர்பான தகவல்களையும் நிபுணர்கள் முன்வைத்ததுடன், விரிவான டிஜிட்டல் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏழு அமைச்சுக்களின் பிரதிநிதிகள், தற்போதுள்ள சவால்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள தேசியக் கட்டமைப்பின் சட்ட ரீதியான அம்சங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் உத்தேச கால அட்டவணை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.