காலி வீதியில் கூடாரம் அமைக்க முயற்சி; பொலிஸார் தலையீடு – போராட்டம் தொடர்கிறது
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டம், இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (ஒக்டோபர் 15) வியாழக்கிழமையும் தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலக அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோரிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்தன. இதையடுத்து, போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போராட்டக்காரர்கள் தீர்மானித்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள காலி வீதியில் போராட்டக்காரர்கள் தற்காலிகக் கூடாரமொன்றை அமைத்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த கூடாரத்தை அகற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் அதனை வீதியின் ஓரத்திற்கு மாற்றினர்.
கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் சாதகமான அறிவிப்பொன்றை வெளியிடும் வரை, போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.