“மருந்து கொடுப்பதற்காவது மனைவி அருகில் இருக்க வேண்டும்” – மஹிந்தவின் உடல்நிலை குறித்து மொட்டுக் கட்சி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை மற்றும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் வழமையான முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஷிரந்தி ராஜபக்ஷவைச் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகத் தான் கருதுவதாகவும் மனோஜ் கமகே விமர்சித்தார்.
கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மனைவியின் அரவணைப்பும் பராமரிப்பும் அவசியமானவை எனச் சுட்டிக்காட்டிய அவர், “எமது வீடுகளிலும் கணவர் நோய்வாய்ப்பட்டால், குறைந்தபட்சம் அவருக்கு மருந்து கொடுப்பதற்காவது மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியை இலக்குவைத்து சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தாம் கருதுவது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், மனோஜ் கமகேவின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.