இலங்கை காதலனால் தாக்கப்பட்டதாக ஜேர்மன் பெண் முறைப்பாடு – 25,000 யூரோவை மீட்டுத் தருமாறு கோரிக்கை
இலங்கையைச் சேர்ந்த தனது காதலனால் தாக்கப்பட்டதாகவும், மீன்பிடிப் படகு கொள்வனவுக்காக வழங்கிய 25,000 யூரோவை மீட்டுத் தருவதற்கு உதவுமாறும் 40 வயதான ஜேர்மன் பெண்ணொருவர் ரத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
29 வயதான இலங்கை இளைஞருடன் காதல் உறவில் இருந்தபோது, அவருக்கு மீன்பிடிப் படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 25,000 யூரோவை வழங்கியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, பூஸ்ஸ, பிடிவெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரை, இலங்கைக்கு முன்னர் மேற்கொண்டிருந்த விஜயமொன்றின்போது அந்தப் பெண் சந்தித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் காதல் உறவு ஏற்பட்டுள்ளது.
பின்னர், அந்தப் பெண் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்த நிலையில், பூஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த இளைஞர் தன்னிடம் மேலதிக பணம் கோரியதாகவும், மரக்கட்டையால் தாக்கியதுடன் தனது கையடக்கத் தொலைபேசியையும் சேதப்படுத்தியதாகவும் அந்தப் பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஏற்கனவே வழங்கிய 25,000 யூரோவை மீட்டுத் தருவதற்கு பொலிஸார் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ரத்கம பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.