போலி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செயலி மூலம் வங்கிக் கணக்குத் தகவல்கள் திருட்டு – சிஐடி விசாரணை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியைப் போன்று உருவாக்கப்பட்ட போலியான செயலி மூலம், பொதுமக்களின் வங்கிக் கணக்குத் தகவல்களைத் திருடி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நீதிமன்றத்தில் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர் மற்றும் இலச்சினையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த போலிச் செயலி, விமானப் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வோருக்கு 50 சதவீத பண மீளளிப்பு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செயலியில் பதிவு செய்வதற்கு ஆரம்பத்தில் 250 ரூபாய் அறவிடப்பட்டதாகவும், அதன் பின்னர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்யுமாறு கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சட்டவிரோதமாக அணுகி பணம் திருடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கையில், இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமது வங்கிக் கணக்குத் தகவல்கள் திருடப்பட்டுள்ளமை குறித்து பலர் உடனடியாக அறிந்திருக்கவில்லை என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் தமது கையடக்கத் தொலைபேசிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமடைவதையும், மின்கலத்தின் மின்சக்தி விரைவாகக் குறைவதையும் அவதானித்த பின்னரே சந்தேகமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடிப் பணப் பரிமாற்றங்களுக்கு உதவும் வகையில் தமது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கு வழங்கியதாகக் கூறப்படும் பல இலங்கையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிஐடி தெரிவித்துள்ளது.
போலிச் செயலியை உருவாக்கி இயக்கியவர்கள் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.