பேச்சுவார்த்தை தோல்வி: ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தைத் தொடரும் பிக்குகள்!
சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் அமர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர்.
ஞானசார தேரரின் விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டம் தொடரும் எனப் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதன்போது, பிக்குகளின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் இந்தப் பதிலில் அதிருப்தியடைந்த பிக்குகள், அரசாங்கத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை நோக்கிப் பயணித்த போராட்டக்காரர்கள், பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, பேச்சுவார்த்தையின் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.