ஊழல் குற்றச்சாட்டுகள்: 16 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை!
இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்வர்ணவாஹினி செய்திச் சேவையின் தகவலின்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக் கோவைகளை, பொலிஸ் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைத்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸ் விசாரணைகளின்போது கண்டறியப்பட்ட அனைத்து தகவல்களும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 55 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனித்தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாடளாவிய ரீதியில் 500 இற்கும் மேற்பட்ட தனிநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 60 அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் உள்ளடங்குவதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான விசாரணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்புடையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு விரிவான விசாரணை அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள எவரும் குற்றவாளிகளாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.