33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை (SOEs) கலைக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதியுடன் நிறுவப்பட்ட அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகள் தொடர்பான நிலுவைகளைத் தீர்ப்பதற்கும் திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஒதுக்கப்பட்ட 5 பில்லியன் ரூபாயில், 2026 ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 2.8 பில்லியன் ரூபாய் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் கொள்வனவு ஆணைகள் இரத்துச் செய்யப்படுதல் உள்ளிட்ட சவால்களை 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அரச நிறுவனங்கள் எதிர்கொண்டிருந்தன.
எனினும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 51 பிரதான அரச நிறுவனங்கள் இணைந்து 259.3 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 227.8 பில்லியன் ரூபாய் இலாபத்துடன் ஒப்பிடுகையில், 31.5 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும்.