சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு
சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்துச் செய்யப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்காக, மியன்மாரின் இந்து முன்னணி அமைப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டி ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட பாராட்டுக் கடிதம் மற்றும் தீபாவளிப் பரிசுப் பொதியொன்றை இந்து முன்னணி மியன்மார் அமைப்பு வழங்கியுள்ளது.
குறித்த கடிதமும் பரிசுப் பொதியும் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி யங்கூனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெருமாவிடம் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்து முன்னணி மியன்மார் அமைப்பின் பொதுச் செயலாளர் கியாவ் நைங் ஓ, புரவலர்களான கி சோ மற்றும் கியாவ் மின், தலைவர் நைங் வின் துன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளை அமைப்பின் பிரதிநிதிகள் பாராட்டினர்.
மேலும், மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் கருணை மற்றும் ஒற்றுமையின் சிறந்த வெளிப்பாடாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இந்தப் பாராட்டுச் செயற்பாடு மியன்மார் சமூகத்தினரிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள நல்லெண்ணத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.