TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழுக்கான விண்ணப்பங்களை இணையவழியிலும் சமர்ப்பிக்க முடியும் எனத் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு வகையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கட்டிட நிர்மாணத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல், காணி மற்றும் சொத்துக்களைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய எட்டு நடவடிக்கைகளுக்கும் TIN இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது சட்டரீதியான கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய திணைக்களம் தொடர்ச்சியாக TIN இலக்கங்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலகங்களுக்கு வருகை தருவோர், குறித்த எட்டு நடவடிக்கைகளில் ஏதேனும் ஒன்றுக்காக சான்றிதழ் தேவைப்படுபவர்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட பிரிவுகளை அணுகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பதற்றமடையவோ அல்லது அவசரப்பட்டு அலுவலகங்களுக்கு வருகை தரவோ தேவையில்லை எனத் தெரிவித்த அவர், இந்தச் செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இணையவழியில் TIN சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும், சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டியிருப்பதால் அதற்குச் சிறிது காலம் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு TIN இலக்கம் வழங்கப்பட்ட பின்னர், சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், TIN இலக்கம் அவசியமாக்கப்பட்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனைக்கும் குறித்த சான்றிதழைப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.