சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (01) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பாடத்துறைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற தலா 20 மாணவர்கள் வீதம் மொத்தம் 40 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கமைய, ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, அரசாங்கத்தின் 'மக்கள் முதன்மை' கொள்கைக்கு அமைவாக, ஜனாதிபதி நிதியம் மக்களின் நலனுக்காகப் பல்வேறு விரிவான பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த கால அரசியல் கலாசாரத்திலிருந்து விலகி, உயர்ந்த ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட கல்வியறிவு மற்றும் அறிவாற்றல் மிக்கவர்களிடம் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் வகையில் நாடாளுமன்றம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலவசக் கல்வியின் மூலம் பயனடைந்துவரும் மாணவர்கள், அறிவையும் நற்பண்புகளையும் வளர்த்துக்கொண்டு, தங்களது திறமைகளை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும், எதிர்காலத் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி, கல்வி என்பது மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
ஏனையவர்களுடன் இணக்கமாக வாழ்தல், சுற்றுச்சூழலை நேசித்தல், மத மற்றும் கலாசார வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட மனிதப் பண்புகளை வளர்ப்பதும் கல்வியின் முக்கிய நோக்கங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியையும் சமமான வாய்ப்புகளையும் உறுதிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இலக்கை அடைவதில் ஜனாதிபதி நிதியம் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.