ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை
ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63ஆவது பொதுச் சபைக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவதன் மூலம், 250 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியிலான சர்வதேச ஊடக விளம்பர வாய்ப்புகள் கிடைக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
தனியார் ஒளிபரப்பு நிறுவனமான MTV Channel (Pvt) Ltd உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச மாநாடு தொடர்பில், இலங்கை சுற்றுலாத்துறை திங்கட்கிழமை (2) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் பிரதான ஏற்பாட்டு நிறுவனமாக MTV Channel (Pvt) Ltd தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை சுற்றுலாத்துறை பிரதான அனுசரணையாளராகச் செயற்படுகின்றது.
ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேச ஊடக நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 300 முதல் 350 வரையான வெளிநாட்டு ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையை சர்வதேச ரீதியில் சுற்றுலாத் தலமாகப் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, சுற்றுலாத்துறை, சர்வதேச மாநாடுகள் மற்றும் நிகழ்வுகள், திருமண சுற்றுலா மற்றும் சுகாதார நலச் சுற்றுலா ஆகிய துறைகளை உலகளாவிய ரீதியில் ஊக்குவிக்க இந்த மாநாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சர்வதேச ஊடகங்களில் இலங்கை தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதன் மூலம் நாட்டின் சுற்றுலா வர்த்தக நாமத்தை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் அதிகரிக்க முடியும் என இலங்கை சுற்றுலாத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மாநாட்டின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நவம்பர் 1ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட சுற்றுலாத்துறை உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இம்மாநாடு இலங்கையின் சர்வதேச சுற்றுலா மேம்பாட்டு முயற்சிகளில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.