இந்தியாவில் சர்வதேச இணைய மோசடி மையம் முறியடிப்பு – 164 வெளிநாட்டவர்கள் மீட்பு!
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா பகுதியில் இயங்கி வந்த சர்வதேச மனிதக் கடத்தல் மற்றும் இணையவழி மோசடி வலையமைப்பை இந்தியப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
இதன்போது, இணையவழி மோசடிகளில் ஈடுபடுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 164 வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 92 பேர் இந்தோனேசியாவையும், 72 பேர் மலேசியாவையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக ஊதியத்துடனான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும், இந்தியா வந்ததும் அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புக்குப் பதிலாக இணையவழி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பெண்களைப் போன்று இணையத்தில் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களை போலியான முதலீட்டுத் தளங்களில் பணம் செலுத்தத் தூண்டும் வகையில் இவர்கள் வழிநடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மோசடி மையத்திலிருந்து மலேசியப் பிரஜை ஒருவர் தப்பிச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 355 கையடக்கத் தொலைபேசிகள், 168 மேசைக்கணினிகள், 26 மடிக்கணினிகள், 53 சிம் அட்டைகள் மற்றும் 174 கடவுச்சீட்டுகள் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கண்டறிவதுடன், சர்வதேச இணையக் குற்ற வலையமைப்புகளுடனான தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்கும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்தக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒன்பது வெளிநாட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போலி வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மூலம் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தி, அவர்களைக் கட்டாயப்படுத்தி இணையக் குற்றங்களில் ஈடுபடுத்தும் சர்வதேச மனிதக் கடத்தல் வலையமைப்புகள் அதிகரித்து வருகின்றமை குறித்த கவலையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.