WhatsApp-இல் புதிய வசதி அறிமுகம்: முன்கூட்டியே செய்திகளை அனுப்ப நேரம் நிர்ணயிக்கலாம்!
WhatsApp செயலியில் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த புதிய வசதியான, செய்திகளை முன்கூட்டியே நேரம் நிர்ணயித்து அனுப்பும் (Message Scheduling) வசதி உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Android மற்றும் iOS பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த வசதியின் மூலம், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்கு முன்கூட்டியே செய்திகளை அனுப்புவதற்கான நேரத்தைத் தீர்மானிக்க முடியும்.
WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் ஆகிய இரண்டிலும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். அத்துடன், எழுத்துச் செய்திகள் மட்டுமன்றி புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இணைய இணைப்புகளையும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
பயனர்கள் முன்கூட்டியே செய்திகளைத் தயாரித்து, அவை பெறுநர்களைச் சென்றடைய வேண்டிய நேரத்தைத் தெரிவு செய்யும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை முன்கூட்டியே நேரம் நிர்ணயிப்பது எப்படி?
WhatsApp உரையாடல் ஒன்றில் செய்தியைத் தட்டச்சு செய்த பின்னர் அல்லது புகைப்படம், காணொளி ஒன்றைத் தெரிவு செய்த பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
அப்போது தோன்றும் தேதி மற்றும் நேரத்தைத் தெரிவு செய்யும் பகுதியில், செய்தி அனுப்பப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானிக்க முடியும்.
அதனை உறுதிப்படுத்தியதும், குறித்த செய்தி உடனடியாக அனுப்பப்படாமல், தெரிவு செய்யப்பட்ட நேரத்தில் அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்படும்.
அவ்வாறு திட்டமிடப்பட்ட செய்திகள் வழக்கமான செய்திகளைப் போலவே பெறுநர்களுக்குக் காட்சியளிக்கும். அவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்பதைப் பெறுநர்களால் அடையாளம் காண முடியாது.
தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் செய்தி அனுப்பப்படுமா?
பயனரின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், திட்டமிடப்பட்ட நேரத்தில் செய்திகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக WhatsApp செயலியைத் திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. திட்டமிடப்பட்ட செய்திகள் WhatsApp சேவையகங்களில் சேமிக்கப்பட்டு, உரிய நேரத்தில் அனுப்பப்படும்.
மேலும், இந்தச் செய்திகள் End-to-End Encryption எனப்படும் முழுமையான மறையாக்கப் பாதுகாப்பின் கீழ் இருக்கும்.
திட்டமிடப்பட்ட செய்திகளைப் பார்ப்பது மற்றும் நீக்குவது எப்படி?
உரையாடல் தொடர்பான தகவல் பகுதியில் (Chat Info), முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செய்திகளைப் பார்வையிட முடியும்.
அவை அனுப்பப்படுவதற்கு முன்னர், தேவையெனில் குறித்த செய்திகளை நீக்கவும் முடியும். செய்தி இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் பெறுநர்களுக்கு எந்தவொரு அறிவித்தலும் அனுப்பப்படாது.
குழு உரையாடல்களில் இந்த வசதி எவ்வாறு செயல்படும்?
குழு உரையாடல்களில் ஒரு செய்தி திட்டமிடப்படும் நேரத்தில் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மாத்திரமே குறித்த செய்தி அனுப்பப்படும்.
செய்தி திட்டமிடப்பட்ட பின்னர் புதிதாகக் குழுவில் இணையும் உறுப்பினர்களுக்கு அந்தச் செய்தி கிடைக்காது.
உலகளாவிய அறிமுகம்
இந்தப் புதிய வசதி Android மற்றும் iOS பயனர்களுக்கு உலகளாவிய ரீதியில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அறிமுகம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதால் அனைத்து பயனர்களுக்கும் ஒரே நேரத்தில் வசதி கிடைக்காது.
எனவே, தமது WhatsApp செயலியைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்குமாறு பயனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.