4 பில்லியன் ரூபா முதலீட்டு மோசடி: மேலும் ஒரு பணிப்பாளர் கைது!
தோட்டப் பயிர்ச்செய்கை முதலீட்டுத் திட்டங்கள் என்ற போர்வையில் 2,500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாவை மோசடியாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனமொன்றின் மற்றுமொரு பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிதி மோசடி தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Limo Plus International (Pvt) Ltd மற்றும் Limo International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள், தோட்டப் பயிர்ச்செய்கை முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு பணத்தைச் சேகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய மேலும் இரு பணிப்பாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.