1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க முன்மொழிவு
1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு முன்மொழிவு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளதுடன், அதற்கு அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்யா ஸ்ரீ ஹேரத்தும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் கண்டறிதல்கள் அடங்கிய அறிக்கையொன்றைத் தயாரிப்பது இந்தத் தெரிவுக்குழுவின் முக்கிய பொறுப்பாக அமையும் என முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதும் இக்குழுவின் பொறுப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை சம்பவங்களின் வரலாற்றுத் தாக்கங்களை ஆராய்ந்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் காண்பதே இந்த முன்மொழிவின் நோக்கமாகும்.