13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது GTA 6 – புதிய விளையாட்டு அம்சங்களுடன் அறிமுகம்

arvloshan.com

உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம் தொடர்களில் ஒன்றான Grand Theft Auto (GTA) தொடரின் புதிய பதிப்பான GTA 6, இன்று (19) Rockstar Games நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ள இந்த விளையாட்டு, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு முதல் PlayStation 5 மற்றும் Xbox Series X/S விளையாட்டு சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் GTA தொடரின் ஐந்தாவது பதிப்பான GTA 5, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள Leonida மாநிலத்தில் GTA 6 கதை நகர்கிறது. இதில் Vice City நகரம் மீண்டும் இடம்பெற்றுள்ளதுடன், Lucia Caminos மற்றும் Jason Duval ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களின் குற்றச் செயல்களை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

GTA 5இல் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், புதிய பதிப்பில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக இடம்பெறுகின்றன. வீரர்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், Lucia மற்றும் Jason ஆகியோருக்கு இடையிலான காதல் உறவை வீரர்கள் தங்களது முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாற்றியமைக்கக்கூடிய புதிய உறவு முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுக்குள் விரிவுபடுத்தப்பட்ட சமூக ஊடகக் கட்டமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரலாகும் காணொளிகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் செய்தி அறிவிப்புகள் ஊடாக மறைக்கப்பட்ட பணிகள் மற்றும் மேலதிக விளையாட்டு அம்சங்களைக் கண்டறிய முடியும்.

அதேவேளை, பொலிஸ் விசாரணைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான விளையாட்டு அம்சங்களும் மேலும் யதார்த்தமான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர்களின் ஆடைகள், வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் அவர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டில் இடம்பெறும் கட்டுப்படுத்தப்படாத கதாபாத்திரங்களான NPCகளின் (Non-Playable Characters) செயல்பாடுகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வீரர்களின் நடவடிக்கைகளுக்கு இயல்பான முறையில் எதிர்வினையாற்றுவதுடன், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கவனிப்பதும் முந்தைய சந்திப்புகளை நினைவில் வைத்திருப்பதும் இதன் சிறப்பம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதற்கிடையில், GTA 6 வெளியீட்டுக்கு முன்னரே பல சாதனைகளைப் படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Sensor Tower நிறுவனத்தின் மதிப்பீடுகளின்படி, உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முன்னர் முன்பதிவுகள் மூலம் மாத்திரம் 1.54 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 1.6 கோடி விளையாட்டுப் பிரதிகளுக்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது.

இந்த விளையாட்டின் விரிவான திறந்த உலகக் கட்டமைப்பை உருவாக்குவதில் Rockstar நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் பணியாற்றும் 1,600க்கும் மேற்பட்ட அபிவிருத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியீட்டுக்கு முன்னரான விமர்சனங்களிலும் GTA 6 அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. 140க்கும் மேற்பட்ட விமர்சனங்களின் அடிப்படையில் Metacritic தளத்தில் 100க்கு 99 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், நீண்டகாலமாக அதிக மதிப்பீட்டைப் பெற்ற விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கும் The Legend of Zelda: Ocarina of Time விளையாட்டுக்கு இணையான உயர்ந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

பிரபல விளையாட்டு ஊடகமான IGN, GTA 6 விளையாட்டுக்கு 10க்கு 10 என்ற முழுமையான மதிப்பீட்டை வழங்கியுள்ளது. அதேவேளை, The Guardian நாளிதழ் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கி, விளையாட்டின் விரிவான உலகக் கட்டமைப்பு மற்றும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதையைப் பாராட்டியுள்ளது.

எனினும், விளையாட்டின் சில தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, PlayStation 5 Pro உள்ளிட்ட தற்போதைய தலைமுறை விளையாட்டு சாதனங்களில் விளையாட்டு 30 FPS என்ற வேகத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெட்டி வடிவிலான விளையாட்டுப் பிரதிகளில் நேரடி விளையாட்டு வட்டுகள் (Discs) வழங்கப்படாமல், டிஜிட்டல் பதிவிறக்கக் குறியீடுகள் மாத்திரம் வழங்கப்படுவதாகக் கூறப்படுவதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

விளையாட்டை நிறுவுவதற்குத் தேவையான 212GB வரையான சேமிப்பக இடவசதியும் அதன் விலையும் வீரர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

இந்தியாவில் GTA 6இன் Standard Edition பதிப்பு சுமார் 5,999 இந்திய ரூபாவுக்கும், Ultimate Edition பதிப்பு 7,499 இந்திய ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் Standard Edition பதிப்பின் விலை 79.99 அமெரிக்க டொலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கணினி (PC) விளையாட்டு வீரர்கள் GTA 6க்காக மேலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Windows கணினிகளுக்கான வெளியீட்டுத் திகதியை Rockstar Games நிறுவனம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இரண்டு முறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய GTA 6, உலகளாவிய ரீதியில் சுமார் 23.5 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள GTA 5 விளையாட்டின் அடுத்த பதிப்பாக வெளியாகியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘எங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ – மகள் குறித்த வதந்திகளுக்கு அர்ஜுன் பதிலடி

...

arvoshan.com

“எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது” – ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்

...

arvoshan.com

சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!

...

arvoshan.com

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

...

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!

...

arvoshan.com

15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!

...

arvoshan.com

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’ – தலைப்பு போஸ்டர் வெளியீடு

...

arvoshan.com

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

...

arvoshan.com

GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!

...

arvoshan.com

புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

...

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...