அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இடம்பெறுவதாகவும், அதற்காகப் பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அஜித் குமாருக்கு சிவராஜ்குமார் மீது மிகுந்த மரியாதை இருப்பதால், அவரை அணுக முடிவு செய்ததாகவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் கதையை சிவராஜ்குமாரிடம் விவரித்ததைத் தொடர்ந்து, அவர் சாதகமான பதிலை வழங்கியதாகவும் சுரேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் படப்பிடிப்பு தற்போது இரவு நேரங்களில் நடைபெற்று வருவதாகவும், ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படப்பிடிப்பில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். டிசம்பர் மாதம் வரை படப்பிடிப்பு தொடரவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் 17 அல்லது 18ஆம் திகதி சிவராஜ்குமார் படப்பிடிப்பில் கலந்துகொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராஜ்குமார் ஏற்கனவே ‘கேப்டன் மில்லர்’, ‘ஜெயிலர்’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இரண்டாவது முறையாக இணைந்து ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்தின் மனைவி ஷாலினி, ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பூஜை கடந்த நவம்பர் 2ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து, நவம்பர் 12ஆம் திகதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பமானது.
இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா, பிரபு, பார்த்திபன், சுனில், உன்னி முகுந்தன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.