15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், தனது இசைப் பயணத்தின் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனைக் கொண்டாடும் வகையில், தனது இசைப் பயணம் குறித்த நெகிழ்ச்சியான பதிவொன்றை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான தனுஷ் நடிப்பிலான ‘3’ திரைப்படத்தின் ‘Why This Kolaveri Di’ பாடல் மூலம் உலகளவில் கவனம் பெற்றார் அனிருத். அந்தப் பாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் இசையமைத்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
தனது 15 ஆண்டுகால இசைப் பயணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தப் பயணம் இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் மற்றும் மாயாஜாலங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் தொடங்கிய தனது இசைப் பயணம் பல்வேறு மொழிகளைக் கடந்து, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சர்வதேசக் கலைஞர்களுடனான கூட்டணிகள், சுயாதீன இசை முயற்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சாதனைகள் குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனது பாடல்களுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு, உலகெங்கிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு ஆகியவை கனவிலும் நினைத்துப் பார்க்காத அனுபவங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அனிருத், ‘எல்.ஐ.கே’, ‘ஜனநாயகன்’, ‘டிசி’, ‘பாரடைஸ்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டின் முக்கியமான படைப்புகளாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது புதிய முயற்சியான ‘அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்’ மூலம் அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கும் திறமையாளர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது இசையைத் தொடர்ந்து கேட்டு, பாடல்களுடன் இணைந்து பாடி, கொண்டாடி, ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அனிருத், 15 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் ஏராளமான கனவுகளை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
அனிருத்தின் 15 ஆண்டுகால இசைப் பயணத்தை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.