மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள புதிய திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ''தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். ‘இஞ்சி வெல்லம்’ ஜனவரி 29ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் 19ஆவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவிக் முகோபாத்யா ஒளிப்பதிவுப் பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், படத்தின் தலைப்பு அறிவிப்பின்போது இடம்பெறாத நடிகை சைத்ரா ஆச்சரின் பெயர், தற்போது வெளியீட்டுத் திகதி தொடர்பான அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
‘மீசைய முறுக்கு 2’, ‘418’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள சைத்ரா ஆச்சரும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தில் இணைந்துள்ளமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.