வங்கியின் அதிகாரி எனக் கூறி தொலைபேசி அழைப்பு – 70 வயது முதியவரிடம் ரூ. 46 இலட்சம் மோசடி!
வங்கி அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடியாளர்களால், 70 வயதுடைய முதியவர் ஒருவர் ரூ. 46 இலட்சத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த டொக்டர் அமில பெர்னாண்டோ, தனது தந்தையே இந்த மோசடிக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கியொன்றின் சார்பில் வரிக் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) குறித்த நபர் கோரியுள்ளார்.
அது மோசடி அழைப்பு என்பதை அறியாத அவரது தந்தை, கோரப்பட்ட விபரங்களை வழங்கியுள்ளார். இதன் விளைவாக, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 46 இலட்சம் மோசடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமில பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், இதே வாரத்தில் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி அதிகாரிகள் அல்லது அரச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கிகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தொலைபேசி ஊடாக ஒருபோதும் OTP, PIN இலக்கங்கள் அல்லது வங்கிக் கடவுச்சொற்களைக் கோருவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அழைப்பைத் துண்டிக்குமாறும், சம்பந்தப்பட்ட வங்கியின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.