ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக துமிந்த ஹுலங்கமுவ ஒருபோதும் செயற்படவில்லை – பிமல் பதிலடி!
புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பொருளாதார ஆலோசகரான துமிந்த ஹுலங்கமுவ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் பிமல் ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (21) நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அந்தக் கூற்று முற்றிலும் தவறானது எனத் தெரிவித்ததுடன், தனது கருத்தைத் திருத்திக்கொள்ளுமாறும் அவரிடம் கோரிக்கை விடுத்தார்.
துமிந்த ஹுலங்கமுவ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது அதற்கு முன்னர் பதவி வகித்த எந்தவொரு ஜனாதிபதி அல்லது பிரதமருக்கோ பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றியதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் ஹுலங்கமுவ பல்வேறு குழுக்களில் அங்கம் வகித்ததாகத் தெரிவித்த பிமல் ரத்நாயக்க, அவை வர்த்தகத் துறையில் அவர் வகித்த பொறுப்புகளுடன் தொடர்புடையவை என்றும், அவற்றை ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகர் பதவியுடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் விளக்கமளித்தார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழேயே துமிந்த ஹுலங்கமுவ உத்தியோகபூர்வமாகப் பொருளாதார ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே, ஹர்ஷ டி சில்வா தனது கருத்தை மீளப்பெற வேண்டும் அல்லது திருத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து வந்த தற்போதைய அரசாங்கம், முன்னைய நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் அதே பொருளாதார நிபுணரை ஏன் நம்பியிருக்கிறது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில், துமிந்த ஹுலங்கமுவ கடந்த 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
அத்துடன், அவர் இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) தலைவராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.