பூனையைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுப் பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!
இலங்கையின் வரகாபொல பகுதியில், வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் விழுந்த தனது செல்லப் பூனையைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுப் பெண் ஒருவர் தவறுதலாகக் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், வரகாபொல, அல்கம, மதுருபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில், வீட்டின் பின்னால் பூனைகள் கத்தும் சத்தத்தைக் கேட்ட குறித்த பெண், அங்கு சென்று பார்த்தபோது பூனை ஒன்று கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, தனது தந்தையுடன் கிணற்றுக்கு அருகில் சென்ற அவர், கிணற்றுக்குள் சிக்கியிருந்த பூனையைக் கண்டறிவதற்காகத் தனது கையடக்கத் தொலைபேசியின் மின்விளக்கைப் பயன்படுத்தியுள்ளார்.
அவரது தந்தை, கயிற்றில் கட்டப்பட்ட வாளியைப் பயன்படுத்திப் பூனையை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, குறித்த பெண் கிணற்றுக்குள் வெளிச்சம் பாய்ச்சுவதற்காகக் குனிந்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். விழுந்தபோது, கிணற்றின் கான்கிரீட் பகுதியுடன் அவரது தலை மோதியிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உறவினர் ஒருவரின் உதவியுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட அவர், நிட்டம்புவ, வத்துபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், நிட்டம்புவ, கலகெதிஹேன பகுதியில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்ததுடன், தனது பெற்றோர் மற்றும் இளைய சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.