யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!
யானைகளை உயிராபத்திலிருந்து பாதுகாப்பதுடன், மனித - யானை மோதல்களைக் குறைக்கும் நோக்கில் ‘ஹஸ்தி சேனா’ (Hasthi Sena) எனும் பெயரில் நாடளாவிய விசேட நடவடிக்கையை சுற்றாடல் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கை இன்று (02) வடமேல் வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட கல்கிரியகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 17 யானைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர், யானைகள் வாழும் பிரதேசங்களில் சுமார் 80 சதவீதமான பகுதிகளை இந்த நடவடிக்கை உள்ளடக்கும் எனத் தெரிவித்தார். எஞ்சிய 20 சதவீதமான பகுதிகளுக்காகத் தனியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யானைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத துப்பாக்கிகள், ஹக்கா படாஸ் எனப்படும் வெடிபொருள் பொறிகள், அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கண்ணிப் பொறிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஆரம்பக்கட்ட நடவடிக்கையில் 60 இராணுவத்தினர் பங்கேற்றதுடன், ஆறு குழுக்களின் கீழ் 10 செயற்பாட்டுக் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நாடளாவிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண வனவிலங்கு பணிப்பாளர் புஷ்பந்த விமலதாச, சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர கரியவசம் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வனவிலங்கு அதிகாரிகள், அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
யானைகளின் உயிரைப் பாதுகாப்பதுடன், மனித - யானை மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.