மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்
மெல்பேர்னிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில், சரக்குப் பகுதியில் புகை எச்சரிக்கை ஒலி செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 1ஆம் திகதி இரவு 11.20 மணிக்கு கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்த UL605 என்ற விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானத்தின் சரக்குப் பகுதியில் புகை எச்சரிக்கை சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான பொறுப்பு எனவும் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.