மின்னல் தாக்கி தீப்பரவல்: அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நான்கு வாகனங்கள் சேதம் – நிர்வாகம் விளக்கம்
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரு வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், மேலும் மூன்று வாகனங்கள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு மத்தியில் துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் பல வாகனங்கள் சேதமடைந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீப்பரவல் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள துறைமுக நிர்வாகம், சம்பவம் இடம்பெற்ற உடனேயே அதன் அவசரகாலப் பதிலளிப்புப் பிரிவினர் (ERU) விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக தீ அருகிலிருந்த ஏனைய வாகனங்களுக்குப் பரவுவது தடுக்கப்பட்டதுடன், அங்கிருந்த சரக்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான அவசரகாலச் சம்பவங்களைக் கையாள்வதற்குத் துறைமுகத்தின் அவசரகாலப் பதிலளிப்புக் குழுவினர் முறையான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாகவும், இதற்கு முன்னரும் அருகிலுள்ள சமூகங்களுக்கு தீ விபத்துகளின்போது உதவிகளை வழங்கியுள்ளதாகவும் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சம்பவத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு வாகனம் மாத்திரமே பலத்த சேதமடைந்துள்ளதாகத் துறைமுக நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.