பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் மீது காட்டு யானை தாக்குதல்!
அநுராதபுரம், எப்பாவல – மகா இல்லுப்பள்ளம பகுதியில் 45 வயதுடைய பெண் ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர், அங்கிருந்து தப்பிச் சென்றபோது காட்டு யானையுடன் மோதியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வெள்ளிக்கிழமை (27) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட பணப் பிரச்சினையே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த சந்தேகநபர், அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது காட்டு யானையுடன் மோதியதில் காயமடைந்த அவர், எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் விஷம் அருந்தியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் மகா இல்லுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.