இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – இலங்கை வலியுறுத்தல்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
IORA அமைப்பின் முன்னாள் தலைமைப் பொறுப்பை வகித்த நாடாகவும், அதன் முக்கூட்டு உறுப்பினராகவும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன்போது, கடல்சார் பாதுகாப்பு, மீன்பிடித்துறை, நீலக் காபன் (Blue Carbon), அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இத்தகைய ஒத்துழைப்புகள் கடலோரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள நன்மைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புத்தாக்கம், திறந்தநிலை, மீள்தன்மை மற்றும் தகவமைப்புத் திறன்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தியாவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் IORA அமைப்பின் செயற்பாடுகளுக்கு இலங்கை தனது முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அமைப்பின் ஒருமித்த குரலை வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட முன்னுரிமைகளை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதற்கும் இலங்கை தொடர்ந்து ஒத்துழைக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.