பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டிய வாயேஜர் 1 – விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சாதனை!
மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கலங்களில் பூமியிலிருந்து மிகத் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கும் நாசாவின் ‘வாயேஜர் 1’ (Voyager 1) விண்கலம், பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டியுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளும் இதுவரை எட்டாத இந்தத் தொலைவை அடைந்திருப்பது விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஒரு ஒளி நாள் என்பது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் வானொலி சமிக்ஞை ஒன்று பூமியிலிருந்து விண்கலத்தைச் சென்றடைய 24 மணித்தியாலங்கள் எடுக்கும் தொலைவைக் குறிக்கிறது. இது சுமார் 1,600 கோடி மைல்கள் அல்லது 2600 கோடி கிலோமீற்றர் தொலைவாகும்.
1998ஆம் ஆண்டு நாசாவின் மற்றொரு விண்கலமான ‘பயனியர் 10’ (Pioneer 10) விண்கலத்தை முந்தியதிலிருந்து, பூமியிலிருந்து மிகத் தொலைவில் பயணிக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் என்ற சாதனையை வாயேஜர் 1 தக்கவைத்துள்ளது.
1977ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 மற்றும் அதற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் ஏவப்பட்ட அதன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2 ஆகியவை ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்வதே அவற்றின் ஆரம்ப நோக்கமாக இருந்தது.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட காலத்தை விடப் பத்து மடங்கு அதிகமான காலமாக இந்த விண்கலங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தின் வாயேஜர் திட்ட முகாமையாளர் கரீம் பதருதீன் தெரிவிக்கையில், 49 ஆண்டுகளாக விண்கலங்கள் விஞ்ஞான ரீதியாகப் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருவது அவற்றை வடிவமைத்து உருவாக்கியவர்களின் திறமைக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் சூரியனின் காந்தப்புலத்தால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையமான ஹீலியோஸ்பியரை முறையே 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கடந்து, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்பில் 48 மணித்தியால தாமதம்
வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டியுள்ள நிலையில், அதனுடன் தொடர்புகொள்வது நாசாவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
நாசாவின் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (Deep Space Network) எனப்படும் பாரிய வானொலி அன்டெனாக்கள் மூலம் விண்கலத்திற்குக் கட்டளைகளை அனுப்பவும், அதிலிருந்து தரவுகளைப் பெறவும் முடிகிறது.
எனினும், பூமியிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞை விண்கலத்தைச் சென்றடைய 24 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன. அதற்குப் பின்னர் விண்கலத்திலிருந்து பதில் சமிக்ஞை பூமியை வந்தடைய மேலும் 24 மணித்தியாலங்கள் ஆகின்றன.
இதனால் ஒரு கட்டளையை அனுப்பி அதற்கான பதிலைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவைப்படுகின்றன.
மின்சக்தியைச் சேமிக்க புதிய முயற்சி
விண்கலத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து பேணுவதில் அதன் மின்சக்தி குறைந்து வருவது முக்கிய சவாலாக உள்ளது.
வாயேஜர் 1 விண்கலத்தில் புளூட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்ட மூன்று வெப்ப மின்னியக்க உற்பத்தி அமைப்புகள் உள்ளன. இவை ஆரம்பத்தில் 470 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்தன.
ஆனால், ஆண்டுதோறும் சுமார் நான்கு வாட்ஸ் மின்சக்தி குறைந்து வருவதால், தற்போது அதன் மின்சார உற்பத்தி சுமார் 210 வாட்ஸாகக் குறைந்துள்ளது.
விண்கலத்தில் இருந்த 10 விஞ்ஞானக் கருவிகளில் தற்போது இரண்டு மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு தரவுகளை அனுப்புகின்றன. காந்தப்புலத்தை ஆய்வு செய்யும் கருவியும், மின்னூட்டம் கொண்ட துகள்களின் அடர்த்தியை ஆராயும் கருவியும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மின்சாரத்தைச் சேமிக்கும் நோக்கில், நாசா அண்மையில் விண்கலத்தின் மின்சக்தி விநியோகத்தில் பாரிய மாற்றமொன்றை மேற்கொண்டது.
அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திய மூன்று சாதனங்கள் நிறுத்தப்பட்டு, அதைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வேறு மூன்று சாதனங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு ‘பிக் பேங்’ (Big Bang) எனப் பெயரிடப்பட்டது.
இதன் மூலம் 10 வாட்ஸ் மின்சாரத்தைச் சேமிக்க முடிந்துள்ளதாகவும், இதனால் விண்கலத்தின் செயல்பாட்டுக் காலத்தை மேலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் நீடிக்க முடியும் என்றும் திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்பில் ஏற்பட்ட தற்காலிக பாதிப்பு
கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் வாயேஜர் 1 விண்கலத்துடனான தொடர்பு சுமார் 48 மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டது. பின்னர் தொடர்பு மீண்டும் சீரடைந்த போதிலும், விண்கலத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
விண்கலத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து எவ்வளவு காலம் பேண முடியும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி, மேலும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை அது செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40,000 ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு விண்மீனை நெருங்கும்
தற்போது வாயேஜர் 1 விண்கலம் மணிக்கு சுமார் 61,155 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்து வருகிறது. அது தற்போது Gliese 445 என்ற விண்மீனை நோக்கிச் செல்கிறது.
பூமியிலிருந்து 17 ஒளியாண்டுகளுக்கும் அதிகமான தொலைவில் உள்ள அந்த விண்மீனை வாயேஜர் 1 சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பின்னர் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அந்த விண்மீனிலிருந்து சுமார் 1.7 ஒளியாண்டுகள் தொலைவில் அது கடந்து செல்லும்.
இதற்கிடையில், வாயேஜர் 2 விண்கலம் 2035ஆம் ஆண்டில் ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதுவரை அந்த விண்கலம் தொடர்ந்து செயல்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மனிதகுலத்தின் செய்திகளைச் சுமந்து செல்லும் விண்கலங்கள்
வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய விண்கலங்களில் தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகட்டினால் உருவாக்கப்பட்ட ‘கோல்டன் ரெக்கார்ட்’ (Golden Record) எனப்படும் பதிவுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் 55 மொழிகளில் பதிவுசெய்யப்பட்ட வாழ்த்துச் செய்திகள், இசை, இயற்கை ஒலிகள், படங்கள் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோரின் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
விண்கலங்கள் ஒருநாள் மின்சக்தியை முழுமையாக இழந்தாலும், அவை விண்வெளியில் தொடர்ந்து பயணிக்கும். அவற்றுடன் மனிதகுலத்தின் கலாசார அடையாளங்களையும் தாங்கிச் செல்லும்.
வியாழன் மற்றும் சனி கோள்களின் புதிய நிலவுகளைக் கண்டறிதல், வியாழனின் நிலவான ஐயோவில் (Io) எரிமலைச் செயல்பாடுகளைக் கண்டறிதல், சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனின் வளிமண்டலத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வாயேஜர் விண்கலங்கள் பங்களித்துள்ளன.
அத்துடன், பூமியின் சிறிய தோற்றத்தை வெளிப்படுத்திய புகழ்பெற்ற ‘பேல் புளூ டாட்’ (Pale Blue Dot) புகைப்படத்தையும் வாயேஜர் 1 எடுத்திருந்தது.
விண்கலங்கள் இறுதியில் செயலிழந்தாலும், அவை மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் அழியாத சாதனைகளாகத் திகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.