நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவைக்கு நவம்பர் மாதம் சிறப்புக் கட்டணச் சலுகை!
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான நவம்பர் மாத விசேடக் கட்டணக் குறைப்புகள் மற்றும் பயணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (நவம்பர் 4) காங்கேசன்துறையில் அமைந்துள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இருவழிப் பயணங்களுக்கான பொருளாதார வகுப்பு (Economy) கட்டணம் 5,500 இந்திய ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொதிகளைப் பதிவுசெய்யப்பட்ட பயணப் பொதிகளாகவும் (Check-in Luggage), 7 கிலோகிராம் வரையிலான பொதிகளை கையடக்கப் பொதிகளாகவும் (Hand Luggage) எவ்வித மேலதிகக் கட்டணமுமின்றி எடுத்துச் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 கிலோகிராமுக்கு அதிகமான மேலதிகப் பொதிகளுக்குப் பின்வரும் கட்டணங்கள் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 5 கிலோகிராம் – 1,500 இந்திய ரூபா (5,250 இலங்கை ரூபா / 16 அமெரிக்க டொலர்)
- 10 கிலோகிராம் – 2,500 இந்திய ரூபா (8,750 இலங்கை ரூபா / 26 அமெரிக்க டொலர்)
- 30 கிலோகிராம் – 6,000 இந்திய ரூபா (21,000 இலங்கை ரூபா / 63 அமெரிக்க டொலர்)
திருத்தப்பட்ட பயணக் கட்டண விபரங்கள்:
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை:
- பெரியவர்கள் – 5,500 இந்திய ரூபா (19,250 இலங்கை ரூபா / 58 அமெரிக்க டொலர்)
- குழந்தைகள் – 5,000 இந்திய ரூபா (17,500 இலங்கை ரூபா / 53 அமெரிக்க டொலர்)
காங்கேசன்துறை – நாகப்பட்டினம்:
Economy வகுப்பு:
- பெரியவர்கள் – 5,500 இந்திய ரூபா (19,250 இலங்கை ரூபா / 58 அமெரிக்க டொலர்)
- குழந்தைகள் – 5,000 இந்திய ரூபா (17,500 இலங்கை ரூபா / 53 அமெரிக்க டொலர்)
Pre-Economy வகுப்பு:
- பெரியவர்கள் – 6,000 இந்திய ரூபா (21,000 இலங்கை ரூபா / 64 அமெரிக்க டொலர்)
- குழந்தைகள் – 5,500 இந்திய ரூபா (17,250 இலங்கை ரூபா / 58 அமெரிக்க டொலர்)
இதற்கமைய, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டைப் போன்று இம்முறையும் பருவமழைக் காலத்தில் கப்பல் சேவை நிறுத்தப்படாது எனவும், மழைக்காலத்திலும் சேவை தடையின்றித் தொடரும் எனவும் சுபம் ஃபெர்ரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இந்தியா – இலங்கை இடையே கடல் வழிப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் அறிவிக்கப்பட்டுள்ள கட்டணச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.