தென் கொரியாவில் லொறியிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த மரப்பொருள் தாக்கி இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
தென் கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசொங் (Hwaseong) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
30 வயதுகளைச் சேர்ந்த குறித்த இருவரும், அருகிலுள்ள தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு தங்குமிடத்துக்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாகப் பயணித்த சரக்கு லொறியிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த மரத்தினால் செய்யப்பட்ட வீட்டின் கூரையின் ஒரு பகுதி அவர்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற வீதியில் பாதசாரிகளுக்கான நடைபாதை வசதி இல்லாததால், அவர்கள் வீதியோரமாக நடந்துசென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தென் கொரிய பொலிஸாரிடம், வீதியைச் சரியாகக் கவனிக்கத் தவறியமையே விபத்துக்குக் காரணம் என லொறியின் சாரதி தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்து இடம்பெற்றபோது சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், லொறியின் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இரு இலங்கையர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.