தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை
கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள தும்பர சிறைச்சாலையில் சிறை அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த 27 வயதுடைய விளக்கமறியல் கைதியின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கைதி சிறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லத்தென்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இரவு சுமார் 8 மணியளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், உயிரிழந்த கைதியின் மரணம் தொடர்பில் தங்களுக்கு முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து வேறு நபர்கள் மூலமாகவே தாங்கள் அறிந்துகொண்டதாகவும், பின்னர் கலகெதர பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலைக்குச் சென்று விசாரித்தபோதும், சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் முகத்தைக்கூட பார்ப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அவரது மரணம் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே கிடைத்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கைதி சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்களே ஆகியிருந்ததாகவும், அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரது உயிரை மீட்டெடுக்க முடியாது என்றாலும், மரணத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டி, கலகெதர பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபருக்கு திருமணமாகி சுமார் ஆறு மாதங்களே ஆகியுள்ளதுடன், அவரது மனைவி தற்போது இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு கிராம் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட வழக்கில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர் சுமார் ஒரு வாரகாலமாக விளக்கமறியல் காவலில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து அவரது சடலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.