ஜோர்டான் தேவாலயத் தாக்குதலில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு!
ஜோர்டானின் தெற்குப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (23) கராக் ஆளுநர் பிரிவின் அல்-ஹமூத் கிராமத்தில் அமைந்துள்ள கிரேக்க மரபுவழி கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளதாக ஜோர்டான் சுகாதார அமைச்சர் இப்ராஹிம் அல்-பதூர் சனிக்கிழமை (24) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த 25 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஊர்வலத்தின்போது, ஆயுதம் ஏந்திய நபர்கள் தேவாலய வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையில், ஜோர்டான் மக்களின் பாதுகாப்பும் நலனும் தமது நாட்டைப் பொறுத்தவரையில் சமரசம் செய்ய முடியாத விடயங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் மன்னர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இது மிகவும் கொடூரமான பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்ட ஜோர்டான் உள்துறை அமைச்சர் மாஸன் அல்-பராயா, தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காகப் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் தேசிய துக்கம்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜோர்டான் பிரதமர் ஜஃபர் ஹசன், வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அரச அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜோர்டானில், கராக் பகுதி கணிசமான கிறிஸ்தவ மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.